யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர் தொடர்பான சாட்சிய விசாரணையின்போது, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாயமான காரணங்களுடன் கூடிய சத்தியக் கடதாசியை (Affidavit) மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களின் உறவினர்களால் 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 19, 2012 அன்று விசாரணைகள் ஆரம்பமாகின.
குறித்த வழக்கு விசாரணைகளின் போது 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கோட்டாபய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நிகழ்நிலை (Online) ஊடாகத் தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.
இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.