கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது எனக் கருதப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் மனிதக் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, கொத்மலை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் குறித்த உடல் பாகம் தோண்டி எடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல் பாகம் யாருடையது என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளுக்காகவும், மரபணு (DNA) பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கொத்மலை – இறம்பொடை மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரை 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவு ஏற்பட்ட வேளையில் அந்த வீதியில் பயணித்ததாகக் கூறப்படும் ஒரு வேன் மற்றும் லொறி ஆகியனவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்துள்ளார்.

