விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது சடலங்களா! மீண்டும் அகழ்வு பணி
கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவை மீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று(13.07.2023) இடம்பெறவுள்ளது.
மேலும் புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி கடந்த 06.07.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது சுமார் 13 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Leave a comment