கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

national hospital

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் (Kandy National Hospital) முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சைத் தொடர் கடந்த நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இது இன்று (நவம்பர் 19) வரை இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான பௌத்த உறவுகளையும், 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளையும் முன்னிட்டு இந்தச் சத்திரசிகிச்சைத் தொடர் மேற்கொள்ளப்பட்டது.

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் நடைபெறும் இந்தச் சத்திரசிகிச்சைக்காக, தாய்லாந்தின் சிரிர்ராஜ் வைத்தியசாலை (Siriraj Hospital) முதன்மை வகிக்க, அந்நாட்டின் மூன்று பிரதான பௌத்த விகாரைகள் இணைந்து 150 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

இந்தச் சத்திரசிகிச்சையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நோயாளியால் மிகவும் குறுகிய காலத்தில் நடமாட முடியும். இலங்கையின் வைத்தியசாலைகளில் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளி நடப்பதற்குச் சில நாட்கள் எடுக்கும் நிலையில், இந்தச் சத்திரசிகிச்சை மூலம் நோயாளி சத்திரசிகிச்சை செய்யப்பட்டுச் சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு நடக்க முடியும்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் எலும்பு முறிவு நிபுணத்துவ வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடனும், தாய்லாந்தின் சிரிர்ராஜ் வைத்தியசாலையைச் சேர்ந்த நிபுணத்துவ வைத்தியர்கள் உட்பட 80 பேர் கொண்ட வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடனும் இந்தச் சத்திரசிகிச்சைத் தொடர் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது.

Exit mobile version