தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் கஜ்ஜா எங்கு வேலை செய்தார்! அதிர்ச்சி தகவல்

4 10

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அனுர விதானகமகே எனும் “மீகசரே கஜ்ஜா” தாஜுதீன் கொலை இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றியிருந்தார் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணகைள் மூலம் தெரியவந்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல், 2012 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட தேசிய ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக அப்போதைய அரசின் தொடர்பு குறித்த சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தாஜுதீன் வழக்கில் வெளிவந்த சிசிடிவி காட்சிகளில், தாஜுதீனின் வாகனத்தைத் தொடர்ந்து சென்ற வாகனம் கஜ்ஜாவிற்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டதாக அண்மையில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

அந்த காட்சியில் காணப்பட்டவர் தமது கணவர் என கஜ்ஜாவின் மனைவி முன்பு தெரிவித்திருந்தாலும், அவருடைய குடும்பத்தினரிலிருந்து சிலர் அதனை மறுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி வேட்பாளர் சம்பத் மனம்பேரி, கஜ்ஜாவையும் அவரது இரு குழந்தைகளையும் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையாளர்கள், இந்தக் கொலைகள் கடந்தகால அரசியல் மற்றும் நுணுக்கமான வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய நபர்களை இல்லாமல் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பத் மனம்பேரி தற்போது 90 நாட்கள் தடுப்பு உத்தரவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே பலர் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை சிஐடி விசாரித்து வருகிறது.

தாஜுதீன் கொலை உள்ளிட்ட தீர்க்கப்படாத முக்கியமான அரசியல் வழக்குகள் அனைத்திற்கும் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

28 வயதான வாசிம் தாஜுதீன், இலங்கையின் மிகுந்த திறமைமிக்க ரக்பி வீரர்களில் ஒருவராக விளங்கினார்.

2012 ஆம் ஆண்டு அவரது மரணம் முதலில் விபத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் மரண பரிசோதனைகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அது கொலை என உறுதிசெய்யப்பட்டது.

இன்றுவரையும், அந்த வழக்கு நாட்டின் மிகவும் விவாதிக்கப்படும் தீர்க்கப்படாத கொலை வழக்குகளில் ஒன்றாகவே காணப்படுகின்றது.

Exit mobile version