தனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தான் தற்போது ஜெனீவாவில் இருந்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் குழுவிடம் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னால் 77 நாட்கள் பேச முடியாதபடி தற்போதைய சபாநாயகர் அனுமதி மறுத்தது மற்றும் தன்னுடைய ஒலிவாங்கியை (மைக்ரோபோன்) செயலிழக்கச் செய்தது போன்ற தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டது குறித்து தான் முறைப்பாடு செய்ததாகவும், அது தொடர்பான சாட்சியங்களை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பாதுகாப்பை நீக்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் 323 கொள்கலன்கள் சம்பவம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக, தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை மற்றும் தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் தான் சாட்சியம் அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
தான் சாட்சியம் அளித்த விடயங்கள் தொடர்பாக, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் விரைவில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.