யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற குடும்பப் பெண், 21 வருடங்களாகக் காத்திருந்த நிலையில் 3 குழந்தைகளைப் பிரசவித்த பின்னர் நேற்று (நவ 7) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் 21 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி (அக்டோபர்) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.
குழந்தையைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், இரண்டு நாட்கள் மட்டுமே அவர் கண் விழித்துப் பார்த்ததாகவும், ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

