பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க IMF தயார்: டித்வா புயலுக்குப் பிந்தைய இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு!

1745584150 imf sri lanka

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டும், ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்தும் உள்ள அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்குச் சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே IMF இன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசேக் இதனைக் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் ஏனைய சகாக்களுடன் IMF நெருக்கமாகச் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“புயலினால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஜூலி கோசேக் கூறினார்.

இலங்கை தற்போது அதன் பங்காளிகளுடன் இணைந்து உடனடி அனர்த்தத்திற்குப் பிந்திய சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகிறது. இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னரே பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த தெளிவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் மீட்சி, மறுசீரமைப்பு மற்றும் தாங்கும் திறனுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளிக்க IMF அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் கோசேக் உறுதிப்படுத்தினார்.

புயலுக்கு முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளும் IMF பணியாளர்களும் ஏற்கனவே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

“மீட்புச் செயல்பாட்டில் இலங்கைக்கு மேலும் உதவுவதற்கான மாற்றீடுகளை IMF பணியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும்,” டிசம்பர் 15ஆம் திகதி IMF பணிப்பாளர் சபை கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத் தேவைகள் மற்றும் சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் கிடைத்த பின்னர், அத்தகவல்கள் இலங்கைக்கு மேலும் உதவக்கூடிய விதம் குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானங்களுக்குக் காரணமாக அமையலாம் எனவும் ஜூலி கோசேக் தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

Exit mobile version