ஐஸ் (ICE) போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி, இன்று (19) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள். சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால், மேலதிக விசாரணை அவசியமாகிறது.
தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு டிசம்பர் 24-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே, அன்று முதல் மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவை (Detention Order) வழங்குமாறு பொலிஸார் கோரினர்.
சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மேலதிக தடுப்புக்காவல் கோருவதற்குத் தேவையான முறையான ஆவணங்களை இன்றைய தினமே சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும், பொலிஸார் நீதிமன்ற நடைமுறைகளைப் புறக்கணிப்பதாகவும் வாதிட்டனர்.
இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, சந்தேகநபரை வரும் டிசம்பர் 24-ஆம் திகதி வரை தொடர்ந்தும் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்வழக்கில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரி என்பவரையும் எதிர்வரும் 24-ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

