அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் நான் இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும்.
தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாக கூற விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதன் அர்த்தம் எனக்கு தமிழ் மீது வெறுப்பு என்பதல்ல. என் தாய் தமிழ் மீது எனக்கு தீராத பற்று இருக்கிறது. நான், மாணவ பருவத்தில் இருந்து தமிழ் மொழியில் கையெழுத்திடும் தமிழன்.
தமிழ் திமிர் கொண்ட எனக்கு ஒரு போதும் உடல் களைப்பு ஏற்படுவதில்லை. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு வயது குறைவதாகவே, எனக்குள் இளமை ஊஞ்சலாடுவதாகவே உணர்கிறேன்.
ஆனால், சமீப காலமாக, என் மனதில் ஒருவிதமான சலிப்பு ஏற்படுகிறது. வடக்கிலும், கிழக்கிலும், மலைநாட்டிலும் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளை இட்டு, தமிழ் அரசியல் பரப்பை இட்டு, எனக்கு சலிப்பு ஏற்படுகிறது.
கட்சியின் பொதுசெயலாளர் குருசாமி தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று கொழும்பு பிரைடன் விடுதியில் நடத்திய கட்சி ஒன்றுகூடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று என் பிறந்த நாள். என் தாய் டயனா தவமணி கணேசனும், தந்தை வைத்தியலிங்கம் பழனிசாமி கணேசனும் உயிரோடு இருந்திருந்தால், நான் இன்று செய்யும் காரியங்களை கண்டு மகிழ்வார்கள்.
என் நண்பன் நடராஜா ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தாலும், இன்றைய எம் நகர்வுகளில் பங்காளியாக இருந்தே இருப்பான். ஆனால், இவர்கள் இல்லையே.
என்றாலும் இவர்களை ஈடு செய்ய எனது உடன்பிறவா நண்பர்கள், இரத்தத்தின் இரத்தங்கள், நீங்கள் நேற்றிலிருந்து, நாடு முழுக்க, உலகம் முழுக்க இருந்து வாழ்த்து கூறுகிறீர்கள்.
நேரில் வந்து சந்திக்கிறீர்கள். உங்கள் அன்பால் பூரித்து போய் விட்டேன். அனைவருக்கும் நன்றி.எனக்கு விடை கொடுங்கள். நான் மறைந்து, மீண்டும் பிறந்து வருவேன்.
தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறந்து வருவேன் என்றார்.
Leave a comment