மட்டக்களப்பு ஐஸ் போதைப்பொருள் வழக்கு: முன்னாள் மேயரின் கணவர், பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்!

1755693983076533 0

மட்டக்களப்பு நகரில் ஐஸ் (ICE) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் (சி. சந்திரகாந்தன்) மொழிபெயர்ப்பாளருமான நபரை, பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஊழல் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

அங்கு ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் மொழிபெயர்ப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவருமான நபர் 5 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கூழாவடிப் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு நபர் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சனிக்கிழமை (நவம்பர் 8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதல்வரின் கணவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சுத் தொழிலாளி பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version