எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதுடன், சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 14) முதல் டிசம்பர் 16ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை சீரான நிலைமையில் காணப்படும்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணப் பகுதிகளில் அவ்வப்பொழுது மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகின்ற குளிரான வளிமண்டல நிலைமை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சிறிய அளவிலான காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும். ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 16ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 19 வரை இப்பிரதேசங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. இதனால் நிலச்சரிவைத் தூண்டும் கனமழை கிடைக்கும் என்பதனால், மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
நிலச்சரிவு அபாயத்தின் காரணமாக வெளியேற்றப்பட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் உள்ள மக்கள், மேற்குறிப்பிட்ட இந்த நாட்களிலும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதே சிறந்தது.
தற்போதைய நிலையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன. டிசம்பர் மாதம் முடியும் வரையில் அவ்வப்போது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் (குறிப்பாக 16-19, 23-29ஆம் திகதிகளில்), நீர்த்தேக்கங்களின் நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது.