இந்த வருட இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஒகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என சிலர் கூறிவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தமையையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இது போன்ற விடயங்கள் வேறொரு பிரபஞ்சத்தில் மட்டுமே சாத்தியம் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கருத்துக்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, இந்த அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எவரும் எங்களை விட திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
அதனை மேற்கோள்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வேறொருவர் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கான ஒரே வழி இது தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.