ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த வடக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர்

24 667b6a3d41a43 24

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த வடக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர்

யாழ். (Jaffna) சங்கானையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தல் விடுக்கும் வைகையில் ஆளுநரின் ஊடகச் செயலாளர் செயற்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (25.06.2024) இடம்பெற்ற அம்மாச்சி உணவக திறப்பு விழாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.

இதன்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், ஆளுநரின் ஊடகச் செயலாளர் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஊடகவியலாளர்கள் அந்த இடத்தில் ஆளுநரின் ஊடகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடனே அவர், ‘நீங்கள் யார்? ஊடகவியலாளர்களா? ஊடக அடையாள அட்டை இருக்கிறதா? எந்த ஊடகம்?’ எனக் கேட்டு அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்த முயன்ற போது அங்கு வந்த ஆளுநரின் ஊடக பிரிவில் கடமை புரியும் ஒருவர் குறித்து ஊடகச் செயலாளருக்கு, அவர்கள் ஊடகவியலாளர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியதுடன் சமரசப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், குறித்த ஊடகச் செயலாளர் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version