óசமீபத்திய அதிதீவிர வானிலை அனர்த்தங்களின்போது, தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) உட்பட முக்கிய அரச நிறுவனங்களில் தற்காலிகமாகத் தமிழ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையின் போது, அத்தியாவசியத் தகவல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது.
இது குறித்துப் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபேவர்தனவிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது, “தற்போதைய நிலைமைகள் குறித்துத் தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்காகத் தற்காலிகமாகவேனும் தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களில் தனிப்பட்ட ரீதியில் அல்லது உள்நோக்கம் கொண்டு தமிழ் அதிகாரிகளின் நியமனங்கள் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கை மூலம், எதிர்கால அனர்த்தச் சூழ்நிலைகளில் தமிழ் பேசும் மக்கள் உரிய நேரத்தில் அத்தியாவசிய எச்சரிக்கைகளையும் தகவல்களையும் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

