பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள், கடன் திட்டங்களை அரசு வழங்க வேண்டும் – திகாமடுல்ல மீடியா போரத்தால் கோரிக்கை!

images 7 2

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயல், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள், உதவிகள் மற்றும் சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திகாமடுல்ல மீடியா போரத்தினால் (Digamadulla Media Forum) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலே ஏற்பட்ட புயல், வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தங்களது நாளாந்த கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களையும், இன்னல்களையும் அனுபவித்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் களப்பணியில் ஈடுபடுகின்ற ஊடகவியலாளர்களது ஊடக உபகரணங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஊடக உபகரணங்களும் செயலிழந்துள்ளன.

இதனால், தங்களது நாளாந்த செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாத இன்னல்களுக்கு ஊடகவியலாளர்கள் முகம் கொடுத்திருந்தனர். மேலும் 10 நாட்களுக்கு மேலாக அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டிருந்தமையினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் ஊடக செயற்பாடுகள் முற்றாக முடக்கம் கண்டிருந்தன. இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்த இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலும் தங்களது ஊடக உபகரணங்களின் சேதங்களை கூட பொருட்படுத்தாமல் நாட்டின் நிலைமைகளை ஊடகங்களுக்கு அரிக்கை செய்து இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் இலங்கையினுடைய நிலைமைகளை அறிய செய்வதற்காக, களத்தில் நின்று பணியாற்றிய ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

அண்மையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண செயற்திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக அமைவதுடன், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

இந்த நிவாரணப் பொதியின் ஒரு அங்கமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடக உபகரணங்கள், சலுகை அடிப்படையிலான கடன் வசதிகள், மின்சாரத் தடை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் இன்மையினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான இழப்பீடுகள், ஊடகவியலாளர்களின் களப்பணிக்கான மோட்டார் சைக்கிள்கள், வீட்டு வசதிகள் மற்றும் உதவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன் வர வேண்டும்” என அவ்அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

Exit mobile version