சம்பள அதிகரிப்பு : இரகசியம் பேணும் அரசு

tamilni 94

சம்பள அதிகரிப்பு : இரகசியம் பேணும் அரசு

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சம்பள உயர்வு கோரி போராடுபவர்களின் கோரிக்கை நியாயமானது. அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இது வெறுமனே ஆசிரியர்களின் கோரிக்கை மாத்திரமல்ல, கல்வித் துறையைச் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அல்ல.

சம்பள உயர்வு அனைவருககும் பொறுத்தமானது. அது தனியார் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கலாம், அரச துறையைச் சார்ந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் அனைவருக்குமே ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது. இல்லையென்று சொல்லவில்லை.

அதேநேரத்தில், இந்த போராட்டம் சுயமாக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது அவர்களை பின்னால் இருந்து பிறிதொரு தரப்பினர் அரசியல் நோக்கத்திற்காக இயக்குகின்றார்களா என்று நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

எது எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது என்பது எமக்கு தெரியாது. வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படும் வரை அது தொடர்பான விபரங்கள் நிதி அமைச்சருக்கு மட்டுமே தெரியும். அது பரம ரகசியமாக, சம்பிரதாயப் பூர்வமாக பேணப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version