அரச ஊழியர்களுக்கான 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க ஊழியர்கள் கோரிய 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க அரசாங்கத்திற்கும் விருப்பம் தான், ஆனால் அதனைக் கொடுத்தால் மக்களது வரிப் பணத்திலேயே அந்த நிதியை நாங்கள் மீண்டும் தேட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தெரணியகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆகும்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை மக்களும் அரச ஊழியர்களும் புரிந்து கொண்டு கையாள வேண்டும்.
அரசாங்க ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் மாதம் 7 பில்லியன் செலவழிக்க வேண்டியுள்ளது. 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கோரி 10 ஆயிரம் பேர் வீதிக்கு இறங்கி போராட தயாராகவிருந்தனர்.
அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கும் விருப்பம் தான். எனினும், அவ்வாறு கொடுத்தால் அந்த நிதியை மீண்டும் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே தேட வேண்டியிருக்கும்.
எனவே, பொருளாதாரத்தை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை செய்ய அரசாங்கம் தயார் இல்லை. அத்துடன் கடன் பெற்று அதில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முடியாது.
இலங்கையில் திடமான ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கம். ஆனால், இவற்றுக்கெல்லாம் இடையில் பொதுமக்களுக்கு எம்மால் வழங்க முடியும் அனைத்து நிவாரணங்களையும் நாங்கள் வழங்குவோம். இது தேர்தலுக்காக நாங்கள் செய்யும் வேலைகள் அல்ல. எனவே இவற்றை அரச ஊழியர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்வாரக்ள் என்று நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.