அனர்த்த நிதித் திரட்டல்: விஜித்த ஹேரத் தோல்வி, கதிர்காமரின் அணுகுமுறை பின்பற்றப்படவில்லை – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Udaya Gammanpila

அனர்த்த நிவாரண நிதியைத் திரட்டுவதில் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் அணுகுமுறையைப் பின்பற்றத் தவறியதால், அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அநாதையாக்கப்பட்டுள்ளது எனப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உதய கம்மன்பில சுனாமி அனர்த்த காலத்தில் நிதி திரட்டப்பட்ட விதத்தை இந்த அனர்த்தத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.

சுனாமி அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு 1.5 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது. அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி, சர்வதேச ஊடகங்களுடன் கலந்துரையாடி இலங்கையின் அவல நிலையை உலகுக்குக் கொண்டு சென்றார். இதன் விளைவாக இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர் நிவாரண நிதி கிடைக்கப்பெற்றது.

“இவரது (கதிர்காமரின்) வெளிவிவகார திறனைத் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் கடைப்பிடிக்கவில்லை. வெளிவிவகாரக் கொள்கையில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அமைச்சர் விஜித்த ஹேரத் உலக நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை, உதவிகளைக் கோரவில்லை,” என கம்மன்பில விமர்சித்தார்.

அனர்த்த நிலைமையின் போது வெளிநாடுகளில் இருந்து அதிக நிதி கிடைத்ததாக அரசாங்கம் பெருமிதம் கொள்வதை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதத்தைப் புனரமைக்க 6 முதல் 7 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மதிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் வெளிநாடுகளில் இருந்து 0.17 சதவீதமளவிலான நிவாரண நிதியே கிடைக்கப் பெற்றுள்ளது.

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும, இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதியத்துக்குத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகளவான நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நன்கொடை நிதி கிடைத்ததா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும், உதவி கரம் நீட்ட ஊழல் மோசடி இல்லாதது காரணம் என அரசு பெருமை கொள்வது தவறானது என்றும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version