முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால், மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முத்துஐயன்கட்டுக் குளத்தின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் (Radial Gates) திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முத்துஐயன்கட்டுக் குளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாகத் திறந்த நிலையில் வைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு, இந்த நீர் வெளியேற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது:
குறிப்பாக மன்னாகன்டல் – வசந்தபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வவுனியா வடக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறிவிச்சை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும்.
நீர்மட்டம் உயர்வதை மக்கள் கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளர் அவர்களுக்குத் தகவல் வழங்கி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவுறுத்தியுள்ளது.