மன்னார் மாவட்ட பறங்கி ஆறு, பாலி ஆறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

image 8b04a559b8

வடகிழக்குப் பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால், பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி அதன் வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) திறக்கப்பட்டுள்ளது. இதனால், மன்னார் மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு (DMCU) முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

பேராறு குளம் திறக்கப்பட்டதன் காரணமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்குப் பிரதேசத்தினூடாகச் செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு, பாலி ஆறு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது:

இந்த ஆறுகளின் தாழ்நிலப் பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளைக் கவனித்து, உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version