10 கோடி கொள்ளை: செட்டியார் தெரு நகையகப் பணத்தை அபகரித்த மதுவரி அதிகாரிகள் 05 பேர் கைது!

25 68fac83aa62ba

கடந்த ஜூன் மாதம் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகையகங்களில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக, மதுவரித் திணைக்களத்தின் 05 அதிகாரிகள் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 05 ஆம் திகதி, குறித்த மதுவரி அதிகாரிகள் ‘தேடுதல்’ என்ற போர்வையில் இரண்டு நகையகங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அவர்கள் 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 07 பேரை கைது செய்ததாகக் காவல்துறை ஊடகப் பிரிவு முன்னர் தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை மாத்திரம் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், கைப்பற்றிய பணத்தில் 05 கோடி ரூபாயை மாத்திரம் நகையக உரிமையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பணத்தின் கணக்கு குறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நகையக உரிமையாளர்களால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மதுவரித் திணைக்களத்தைச் சேர்ந்த 05 அதிகாரிகளும் இன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 05 அதிகாரிகளையும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தியபோது, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Exit mobile version