ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

rtjy 323

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த தேரர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராக ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (27.10.2023) வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி, மட்டக்களப்பு சாந்தா புனித மிக்கேல் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட நிறைவு விழாவிலும், 8ஆம் திகதி செங்கலடி மத்திய மகாவித்தியாலய 149 வருட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மட்டு மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல்தரையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு கோரி ஒருபுறமும், சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மக்கள் தமக்கு அந்த நிலம் வேண்டும் என கோரி ஒரு புறமாகவும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அதற்கு தலைமை தாங்குபவர்களுக்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரினர்.

இதன்போது நீதிமன்றம் வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதித்ததுடன் அதனை மீறி வீதியை மறித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் போக்குவரத்து விதிமுறையின் கீழ் அவர்களுக் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவும் என நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 7ஆம் திகதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமணரட்ன தேரர் மற்றும் இரு தேரர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மட்டு தலைமையக பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதின்றில் வழக்கு தாக்குதல் செய்து அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

அதேவேளை 8ஆம் திகதி நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறுவுகள் சங்க தலைவி மற்றும் பண்ணையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து அவர்களிடம் வாக்கு மூலங்கள் பெற்று அவர்களை எதிர்வரும் 17ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு இரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களிடம் வாக்கு மூலங்களை பெறும் விசேட நடவடிக்கை ஒன்றை நேற்று (28) ஆரம்பித்து அவர்களை வீடுவீடாக தேடி வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version