கடவுள் நம்பிக்கைக்காக போராடவேண்டிய நிலை
இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை பாதுகாக்க போராடவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரசா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (24.08.2023) முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் புலம்பெயர் தமிழ் அமைப்பான வி.பி.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பட்டில் 85 மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் இனம் இந்த நாட்டில் மொழியுரிமை அற்றவர்களாக மொழிக்கு சமத்துவும் இல்லாதவர்களாக சிங்கள ஆட்சிமொழியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தமிழுக்கு அந்த உரித்தில்லாத பொழுது சமத்துவத்திற்காக போராட்டங்கள் ஆரம்பித்தன.
எங்கள் மண்ணில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. எங்கள் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எங்கள் நிலங்களை எங்களால் பாதுகாக்கமுடியவில்லை.
இந்நிலையில் 12 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் இருந்து எங்கள் இனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக தங்கள் உழைப்பினையும் அர்ப்பணிப்பினையும் ஈட்டிவருகின்றார்கள்.
இங்குள்ள சிறுவர்கள் சுதந்திரம்பெற்றவர்களாக வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் வெளிநாடு சென்றாலும் அவர்கள் எண்ணங்கள் இந்த மக்களிடத்திலும் இந்த மண்ணிலும் இருக்கின்றது.
எங்கள் எதிர்கால சந்ததிக்காக அவர்கள் தங்களை அர்பணித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.