அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (19.12.2025) மாலை, தனது வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக, குறித்த நபர் தனது இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் காத்திருந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானையைக் கண்டு அச்சமடைந்த நண்பர்கள் இருவரும், அங்கிருந்த மதகுக்குக் கீழே குதித்துத் தப்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யானையிடமிருந்து தப்புவதற்காக வீதியில் ஓடிய போதிலும், யானை அவரைத் துரத்திச் சென்று மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யானைத் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் தம்புத்தேகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

