வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் T-56 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரிக்கும் சிறப்பு பொலிஸ் குழு, பிரபல நடிகை ஒருவரின் வீட்டையும் பரிசோதனை செய்துள்ளது.
நடிகையின் மகனுக்கு துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரபல நடிகையின் வீடு முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நடிகை அரசியலுடன் தொடர்புகளை கொண்ட ஒருவராகும். மேலும் அவரது கணவரின் வணிகங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் போது சில அரசாங்க அமைச்சர்களிடமிருந்து சலுகைகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், முகாமில் இருந்து 73 T-56 துப்பாக்கிகள் உட்பட சுமார் 75 துப்பாக்கிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆயுதங்களிலிருந்து 36 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 39 ஆயுதங்கள் மீட்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த துப்பாக்கி கடத்தல் பற்றிய தகவல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று தகவல் தெரியவந்தது.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹோமாகம, பிடிபனவில் உள்ள ஒரு வணிக இடத்தை சோதனை செய்தபோது, அங்கு 11 T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-81 துப்பாக்கி உட்பட ஏராளமான இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.