குஜராத்தின் புகழ்பெற்ற தேவ்னிமோரி ஸ்தூபியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தரின் புனித தாதுப்பொருட்கள் (Relics), கொழும்பு கங்காராமய விகாரையில் ஒரு வார காலம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (11) இந்தியாவிற்குச் சம்பிரதாயபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த அபூர்வ நினைவுச்சின்னங்களை வணங்குவதற்காக இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டது பௌத்த வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற உணர்ச்சிகரமான பிரியாவிடை நிகழ்வில், இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகள் பங்கேற்றுப் புனித தாதுப்பொருட்களுக்கு கௌரவம் அளித்தனர்.
மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் சி. படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்ன் தலைமையிலான இந்தியக் குழுவினர், இந்தப் புனிதப் பயணத்தின் நிறைவாகத் தாதுப்பொருட்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விடைபெறும் நிகழ்வில் புத்தசாசன அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாலத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தனது விஜயத்தின் போது இந்தியக் குழுவினர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுடனும் அவர்கள் விசேட சந்திப்புகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. வழிபாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, “புனித பிப்ரஹ்வாவை வெளிக்கொணர்தல்” மற்றும் “சமகால இந்தியாவின் கலாச்சார ஈடுபாடு” எனும் தலைப்பிலான இரு விசேட கண்காட்சிகளும் கங்காராமய விகாரையில் இடம்பெற்றன. இவை இந்தியா மற்றும் இலங்கையின் பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் ஆழத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன.
சுமார் 1,700 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இந்தத் தாதுப்பொருட்கள், குஜராத்தின் தொல்லியல் பொக்கிஷமாகக் கருதப்படுபவை. ஒரு வார காலம் நீடித்த இந்தக் கண்காட்சியின் மூலம் இலங்கையின் பௌத்த மக்கள் ஒரு புனிதமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நினைவுச்சின்னங்களின் வருகையானது இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவின் மற்றுமொரு வரலாற்று அத்தியாயமாக அமைந்துள்ளதோடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் “அயல்நாடுகளுக்கு முன்னுரிமை” (Neighbourhood First) எனும் கொள்கையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.