கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன, சுகாதார அமைச்சினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பின்வரும் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஒரு பொறுப்பு வாய்ந்த அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், உரிய அனுமதியின்றி பல்வேறு ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமை. நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் தகவல்களைப் பரிமாறியமை.
கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிகிச்சைகளுக்காகத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களைக் கசியவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் பணிக்குத் திரும்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.