ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

16 1

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள். ஆனால் தடை நீக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பெரும்பான்மை என்பதால்தான் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது, 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு அனைவரும் வடக்குக்கு விரட்டப்படும் போது எங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் எடுத்தோம்.

ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி பயங்கரவாதிகள் அல்ல நாங்கள் மட்டும் பயங்கரவாதிகளா? ஒரே நாட்டில் ஏன் வேறுபாடுகள்?இங்கே தான் தமிழ் – சிங்கள பிரச்சினை தோன்றுகிறது. சம்பவங்களை நாம் பார்க்கும் நோக்கில் தான் பயங்கரவாத கோணங்கள் தோன்றுகிறது.

செம்மணி மனித புதைகுழியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படியானால் கைக்குழந்தைகள் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லமாட்டேன்.

யுத்தம் நடைபெறும் போது இரு பக்கமும் தவறுகள் ஏற்படலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்தாலும், மக்களின் மனதில் இருப்பதை தடுக்க முடியாது.

நான் உண்மை உரைப்பதால் மக்கள் என்னை விரும்புகின்றனர்.எனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசித் தலைவரை கடவுளாக வணங்கவும் முடியும் அதேபோல் மற்றையவரின் கடவுளை மதிக்கவும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version