கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“அனுமதிப்பத்திரம் இல்லாமல் கோதுமை மா இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி 2023.06.14 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரும் இறக்குமதி தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் கோதுமை இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பிறீமா,செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவ்விரு நிறுவனங்களும் கோதுமை விதை இறக்குமதி செய்து அவற்றை மாவாக்கி, பின்னர் விநியோகிக்கின்றன.
உலக சந்தையில் கோதுமை வித்தின் விலை குறைப்பு, டொலரின் பெறுமதி வீழ்ச்சி ,ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளால் கோதுமை வித்தினை இறக்குமதி செய்யும் இவ்விரு நிறுவனங்களும் அதிக இலாபம் அடைகின்றன.
இந்த நிறுவனங்கள் செலுத்தும் இறக்குமதி வரிகளுக்கும் தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம் இல்லாத தரப்பினர் கோதுமை மா இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்விரு நிறுவனங்களும் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை செலுத்துகிறது. இது முறையற்றதாகும்.
தற்போதைய விலைக்கு அமைய சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.