நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்

images 11

மட்டக்களப்பு(Batticaloa) நகரில் பக்கத்து வீட்டு காரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்கவேண்டும் என பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

இதற்கிணங்க, நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் பற்றி தெரியவருவதாவது,

குறித்த நகரில் வாழ்ந்துவரும் ஒய்வு நிலை கல்வி ஆசிரிய ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம் சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீட்டின் பெண் ஒருவருக்கு நாய் கடித்துள்ளதையடுத்து அவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கடிவாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

நாயின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து இரு சாராரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என தனக்கு நஸ்டஈடாக 40 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என கோரினார்.

இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததையடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிசார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Exit mobile version