நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் நிதி இழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அண்மையில் (டிசம்பர் 11) பாராளுமன்றத்தில் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் (Sectoral Oversight Committee) வெளிப்படுத்தப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் கூடிய இக்குழுவில், அனர்த்தத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவிக்கையில், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் என்றனர்.
இருப்பினும், இரயில் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று குழுவின் தலைவர் எஸ். எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளைச் சீரமைக்க நிதியைப் பெற அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உலக வங்கி மூலம் கடனாக நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கியிடமிருந்து கடன் பெறுவது குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால், கடன் தொகையாகப் பெறுவதைத் தவிர்த்து, மின்சாரக் கட்டணம் அதிகரிக்காமல் இருக்க மானியம் பெற முயற்சிக்க வேண்டும் என்று குழுத் தலைவர் அறிவுறுத்தினார்.
புனரமைப்புப் பணிகளுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மூலம் மானியமாகப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் துறைசார் மேற்பார்வைக் குழு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

