இலங்கை அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு அதன் முதல் ஆண்டில் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இத்திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டு காலப்பகுதிக்குள் 8,027 நபர்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் 2025 ஜனவரி 06 ஆம் திகதி 7 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) இது ஆரம்பிக்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள 62 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் மற்றும் தங்களது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் , திருமணச் சான்றிதழ் , இறப்புச் சான்றிதழ்களை எவ்வித தாமதமுமின்றி இலகுவாகப் பெற முடிகிறது:
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு (Visa/Passport) தொடர்பான அவசரத் தேவைகளுக்காகச் சான்றிதழ்களைப் பெறுவதில் கடந்த காலங்களில் நிலவிய நீண்டகாலத் தாமதங்களுக்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக இலங்கையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு நேரில் சென்று அல்லது உறவினர்கள் மூலம் பெற வேண்டியிருந்த ஆவணங்களை, இப்போது தாங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள தூதரகத்திலேயே டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
அரசாங்கத்தின் இந்த டிஜிட்டல் நகர்வு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் தாயகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

