இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை லண்டன் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம் தேடிச் சென்ற 60-இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியாவில் பிரித்தானிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர். இது சட்டவிரோதமானது என கடந்த ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளர் (BIOT Commissioner) லண்டன் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். எனினும், அவர் முன்வைத்த நான்கு காரணங்களையும் நிராகரித்த நீதிபதிகள், பழைய தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், நீண்ட காலமாகச் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்த 60-இற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை (Millions of Pounds) இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிரித்தானிய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
குறித்த தீவில் தமிழர்களைத் தடுத்து வைத்திருந்தமைக்காக ஏற்கனவே பிரித்தானிய வரி செலுத்துவோரின் பெருமளவிலான பணம் செலவிடப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இந்த நீதி, புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.