நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது

tamilni 141

நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது

தான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (07.03.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் கிடையாது. எனினும் நீங்கள் இங்கு தினமும் தனி இராஜ்ஜியம் பற்றிதானே பேசுகின்றீர்கள்.

சமஷ்டி தொடர்பாக பேசுவதில் பிரச்சினையில்லை. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகத்தான் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.

வடக்கு – கிழக்கு மக்கள், இந்த நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். 1983ஆம் ஆண்டில் எனது தந்தையின் தமிழ் நண்பர்களும்தான் கொல்லப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் செய்த விசாரணையில், 6 இலட்சத்து 50 பேர் தாம் நேசித்தவர்களை இழந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

வடக்கில் மட்டும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஒரு நிவாரணம் வேண்டும் என்பது தான் எமதும் கோரிக்கையாகும்.

இது உண்மையான தீர்வாக அமையாவிட்டாலும், நாம் இதனை ஆரம்பிக்க வேண்டும். இந்த எண்ணக்கருவை எம்மால் கைவிட முடியாது. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதற்கான ஆலோசனைகளை வழங்க தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version