இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “தேசிய மக்கள் சக்தி அரசானது இந்த நாட்டை இதற்கு முன்னர் ஆண்ட அரசுகளை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்பதை எனது மனச்சாட்சியின் பிரகாரம் தெரிவிக்க முடியும்.
குறைந்த பட்சம் ஊழல்வாதிகளைப் பாதுகாக்காமல் இருப்பதற்குரிய முதுகெலும்பு இந்த ஆட்சிக்கு இருக்கின்றது.
கடந்த காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டால் பண பலம் இருந்தால் இலகுவில் தப்பிக்க முடியும். ஆனால், இன்று அதற்கு தடை போடப்பட்டுள்ளது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. நூற்றுக்கு 100 சதவீதம் வெற்றி இல்லை என்ற போதிலும் அதற்குரிய முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
நாட்டையும், நாட்டு மக்களையும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களே எமக்கு அவசியம்.
ஆபிரிக்காவில் மிகவும் ஏழ்மையான நாடாக ருவண்டா இருந்தது. ஆனால், இன்று ஆபிரிக்காவில் சிறந்த நாடாக அது மாறியுள்ளது.
இரட்டை நட்சத்திரம் கொண்ட இராணுவ அதிகாரி ஒருவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
நல்ல சர்வாதிகாரம் நாட்டை ஒட்டுமொத்தமாக மாற்றும். அதுதான் ருவாண்டாவில் நடந்தது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் அபிவிருத்தி கண்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்தும் நாம் அனுபவங்களைப் பெறவேண்டும்.
அங்கிருந்த தலைவர்கள் நேர்மையுடன் செயற்பட்டனர். சட்டத்தை அமுல்படுத்தினர்.
எனவே, இலங்கை போன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்க நல்லதொரு சர்வாதிகாரி இருக்க வேண்டும். மகிந்த போன்ற போலி தேசப்பற்றாளர்கள் நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.