இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை (Writ Order) ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கேபிள் கார் திட்ட நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ அல்லது இடையூறு செய்வதையோ பிரதேச செயலாளர் உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.
கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச் செலவுக்காக ஒரு இலட்சம் ரூபாயை மனுதாரருக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆம்பர் அட்வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தது.
கம்பளை அம்புலுவாவ பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரச நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கம்பளை பிரதேச செயலாளர் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, சட்டத்தரணி அலி சப்ரி, குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமான அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும், அதில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலாளர் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாகத் திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்ய முடியவில்லை என்பதாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.