இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய கணினிப் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாணந்துறைப் பகுதியில் உள்ள தனியார் கணினிப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருபவர் எனக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் சந்தேக நபருக்குக் கீழ் பணிபுரிந்ததாகவும், நிதித் தகராறு காரணமாகச் சந்தேக நபரின் வீட்டின் முன் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துப் பாணந்துறைத் தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

