கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன.
அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இருந்து கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.
அண்மையில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச் சந்தை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
