பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி – காலி வீதியில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பௌர்ணமி விடுமுறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரவு நேர களியாட்ட விடுதியிலிருந்து மதுபான போத்தல்கள் மற்றும் சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து இரவு நேர களியாட்ட விடுதியின் உயிமையாளரான சீன பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன பிரஜையை இன்று செவ்வாய்க்கிழமை (07) நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.