திருகோணமலை டச்சுக்குடா (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையொன்றைப் பிரதிஷ்டை செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் விஹாராதிபதி இத்தேபான தம்மாலங்கார தேரர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், விளக்கமறியலில் உள்ள பிக்குகள் உள்ளிட்ட அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டைய மன்னர்களால் உயிரைக் கொடுத்தும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பௌத்த சாசனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய பூமியிலேயே இந்தச் சிலை நிறுவப்பட்டதாக தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், புனிதமான பணியைச் செய்யச் சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாகி, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளமை பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அற்பமான ஒரு காரணத்திற்காகப் பிக்குகள் மீது முன்நொழுந்திராத வகையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி திருகோணமலை நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது. கடற்கரையோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி அத்துமீறிய கட்டுமானங்களில் ஈடுபட்டதாகக் கூறி, பொலிஸார் சிலையை அகற்ற முயன்றபோது அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தேரர் ஒருவர் அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுப் பலமுறை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார். மகா சங்கத்தினருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் இந்த விவகாரம் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டை விஹாராதிபதி இத்தேபான தம்மாலங்கார தேரர் கோரியுள்ளார். நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும், மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்தத் தீர்வு அவசியமானது என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.