புலம்பெயர் நாடொன்றிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த அச்சுறுத்தல்
சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நபரால் நடத்தப்படும் யூடியூப் சனல், தனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த சனலுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடளித்துள்ளார்.
தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முறைப்பாட்டில் கூகுள் நிறுவனத்தையும் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த சனலுக்கு அந்த நிறுவனம் இணைய இடைத்தரகராக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட V8 லேண்ட் க்ரூஸரை சேனசிங்க சொந்தமாக வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் சனல் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சனலின் ஏனைய காணொளிகளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை மற்றிலும் அவதூறானவை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.