கம்பஹா, யக்கலையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்றை ஜே.வி.பி.யினர் அபகரித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து கம்பஹா நீதவான் விலகிக் கொண்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் யக்கலை பிரதேசத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்று அமைந்திருந்தது. குறித்த அலுவலகத்தை பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தலைமையிலான குழுவொன்று சில வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றிக் கொண்டிருந்தது.
அதற்கு எதிராக கம்பஹா இரண்டாம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலை சோசலிசக்கட்சி தொடர்ந்த வழக்கின் பிரகாரம், ஜே.வி.பி.யினரை அங்கிருந்து வெளியேறுமாறும், அலுவலகத்தை மீண்டும் முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபங்களை முன்வைக்க ஜே.வி.பி.தரப்புக்கு நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பிறிதொருதினத்தை வழங்குமாறு அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஜே.வி.பி தரப்புக்கு தமது ஆட்சேபங்களை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குறித்த வழக்கின் விசாரணையில் இருந்து கம்பஹா இரண்டாம் இலக்க மஜிஸ்திரேட் நீதவான் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக்கொண்டுள்ளார்.
அதன் காரணமாக குறித்த வழக்கு இனிவரும்காலங்களில் கம்பஹா முதலாம் இலக்க மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.