நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கே இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 6,000 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறுபோகத்தில் இந்த நெல் இருப்பைக் கொள்வனவு செய்தது.
கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
குறித்த நெல் இருப்பை அரிசியாக்கி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வரும் வழிகளில் மேற்கொள்ளப்படும்.
நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் இந்த நெல் அரிசியாக்கப்படும். அரிசியாக்கப்பட்ட பின், அது லக் சதொச (Laksathosa) மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிக்கப்படும்.