அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் ஒருவர் பொலிஸாரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
நடந்தது என்ன? விகாரையின் தர்ம போதனை மண்டபத்திற்குள் புதையல் தோண்டப்படுவதாக 119 அவசர இலக்கத்திற்குப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்தத் தேரர் தனியாகவே மண்டபத்தின் தரையை சுமார் 4 அடி ஆழம் வரை தோண்டியிருந்தமை கண்டறியப்பட்டது.
விகாரைக்குள் புராதன சின்னங்கள் அல்லது புதையல் ஏதும் இருப்பதாகக் கருதி தேரர் இச்செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து கால திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புனிதமான விகாரை வளாகத்திற்குள்ளேயே தேரர் ஒருவரே இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.