குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

25 68eee1ad403f8

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச் செயற்பட்ட ஜயதிலக்க என்ற பௌத்த துறவியால் இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டதாக மிஹிந்தலை விகாராதிபதி ஒருவர் கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இது குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் மிஹிந்தலையில் உள்ள விகாராதிபதியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், விகாராதிபதி தனக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றையும் அதன் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) 2025 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் பிரதியையும் வழங்கியதாகத் தெரிவித்தார்.

ஜயதிலக்க என்னும் பிரதி அத்தியட்சகர், பௌத்த மதத்தோடு தொடர்புடைய சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து, அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களிலும் வீசியுள்ளார்.

இவ்வாறு வீசப்பட்ட இடங்களை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி, அவற்றைத் திணைக்களத்திற்குச் சொந்தமானதாகக் கையகப்படுத்தியுள்ளார் என்று விகாராதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு பௌத்த துறவியே நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார்.

மேலும், விகாராதிபதியுடனான கலந்துரையாடலின்போது, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கட்டாயம் கற்றுக்கொள்வதற்கான ஓர் சட்டமூலத்தைக் கொண்டுவந்து அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Exit mobile version