ஊழல் ஒழிப்பு நாடான சிங்கப்பூர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்களை வழங்காவிட்டால், சர்வதேச மன்றங்களில் அதனை கேள்விக்குட்படுத்த முடியும் என உயர் நீதிமன்ற நீதியரசர் ரங்கா திசாநாயக்க கூறியுள்ளார்.
குறித்த கருத்தை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊழல் தொடர்பான குறியீட்டான சி.பி.ஐ குறியீட்டில், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக ஊழல்வாதிகளுக்கு எதிராக சர்வதேச சபைகளில் வாதங்களை முன்வைக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், பொது அதிகாரிகள் செய்யும் அனைத்து செயல்களும் ஊழலாக கருதப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பொது அதிகாரிகள் செய்யும் எந்தவொரு செயலும் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் அல்லது வேறு தனி ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து வேண்டுமென்றே அல்லது தெரிந்தே செய்யப்பட்டால், அது ஊழலாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில், அரசின் சில பிரிவுகளை சட்டத்தின் எல்லைக்கு வெளியே பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது என்றும் விவாதித்துள்ளார்.
அத்தகைய நேர்மையான நோக்கத்துடன் செயல்படும் பொது அதிகாரிகள் பயப்படக்கூடாது எனவும் விளக்கியுள்ளார்.
கடந்த காலங்களில் இருந்து ஊழல் ஆதரவு நபர்களால் அரசாங்கம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என்றும் ரங்கா திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.