பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூஸா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து வேறு சிறை அறைகளுக்கு மாற்ற முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த இடமாற்றங்களுக்குக் கைதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன்போது கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து சமீபத்தில் (நேற்று) நடத்தப்பட்ட சோதனையின்போது, 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம் கார்டுகள் மற்றும் ஏராளமான கைபேசி பாகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தெரிவித்திருந்தது.
பூஸா முகாமின் அதிகாரிகள், காலிச் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.
சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதற்குப் பின்னணியில் இந்த இடமாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அத்தியட்சகர் மீதான தாக்குதல் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

