புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட இறைமக்களுக்கு ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை எழுதிய திருவருகைக் காலத் திருமடல் – 2025 இல் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போதைய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. எனினும், தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தமிழர் நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் குறித்த திருமடலில் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

