பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
உயர்ஸ்தானிகருடன் அவரது பாரியாரும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விகாரை தொடர்பான குறைபாடுகளைக் கேட்டறிந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது விகாரை மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது என்றும், விகாரைக்குச் சொந்தமான காணிகளைச் சிலர் அபகரித்துள்ளதாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாத்து, அவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு வழிவகை செய்வதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்தப் பகுதியினரின் வாழ்வாதாரமும் சிறப்பாகும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இந்தத் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.
விகாராதிபதியின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர், விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், மிகுதிப் பணம் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.